Wednesday, December 5, 2012

வாசித்தலும் கருத்துணர்தலும்



எஸ்டிபிஎம்  தமிழ்மொழி
பருவம் 1  :  வாசித்தலும் கருத்துணர்தலும்

பொதுச் செய்திகள்
1.    வழங்கப்பட்ட வாசிப்புப் பிரிவினைச் சார்ந்து கேட்கப்படும் ஐந்து வினாக்கள் மாணவர்களின் பல்வகை இயல்புகளைப் பரிசோதிக்கும் வகையினில் அமைந்திருக்கும். அதனுள் ஒன்று, கருத்துகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்துடுதல் ஆகும்.

2.    வழங்கப்பட்டுள்ள வாசிப்புப் பகுதியில் காணப்படும் முக்கியக் கருத்துகள், துணைக்கருத்துகள் யாவை என்பதனை அடையாளம் காணும் திறனை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகின்றது. அதனோடு, கருத்துணர் கேள்விகளுக்கு மாணவர் அனுபவ ரீதியாகவும், கற்றல்பேறின் ஆழுமையின் சிறப்பினை விவரிக்கும் பாங்கினிலும் இக்கோள்விகள் வினவப்படலாம். இவ்வினாக்களுக்கு ஆய்வுச் சிந்தனை, ஆக்கச் சிந்தனை அடைப்படைகளில் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும்; மாறாக, நேரடியான பதிலாக அமையக் கூடாது.

3.    இவற்றோடு மட்டுமல்லாது, இப்பிரிவினில் வினவப்படும் வினாக்கள் மாணவர்களின் மற்றொரு இயல்பினையும் பரிசோதிக்கும் வகையினில் அமைந்திருக்கும். அது வாசிப்புப் பிரிவினில் காணப்படும் தெரிநிலை, புதைநிலை ஏடல்களை அடையாளம் கண்டு விளக்குதல் ஆகும். இதனோடு, வழங்கப்பட்ட பனுவலில் காணப்படும் கருத்துகளைப் பகுத்தாய்வு செய்வது, அதனுள் காணப்படும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியக் கருத்துகளை மதிப்பிடுவது, மட்டுமல்லாது வழங்கப்பட்ட பனுவலையும் பகுத்தாய்வு செய்து விவரிக்கும் பாங்கிலும் வினாக்கள் வினவப்படலாம்.

4.    இப்பிரிவினில் இருவகைப் பனுவல்கள் வழங்கப்படலாம்; உரைநடை அல்லது உரைநடை அல்லாதவை. இவை உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுயியல், மின்னியல் ஆகிய தகவல் ஊடகங்களில் வெளியான 400 முதல் 450 சொற்கள் கொண்ட பல்வேறு துறைச்சார் பனுவல்களாக  அமைந்திருக்கும். பெரும்பாலும் தமிழ் மொழி, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், கலை, பண்பாடு, சமூகவியல், சமகாலப் பிரச்சனைகளை விவாதிக்கும் பனுவல்களே இப்பிரிவினில் இடம்பெறலாம்.

சிறந்த புள்ளிகளைப் பெற

1.    மாணவர்கள் கேள்விக்கான பதில்களைத் தம் சொந்த நடையிலேயே எழுத வேண்டும்.
2.    மாணவர்கள் வழங்கும் பதில்கள் சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது நன்று.
3.    கேட்டப்படும் வினாக்களுக்கு வாசிப்புப் பகுதியினுள் பதில் அமைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மாணவர்கள் புதைநிலைக் கருத்துகளை அடையாளம் கண்டு தமது பதில்களில் புகுத்தி எழுதலாம்.
4.  அதேபோல், கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் நேரடியான பதில்கள்   பனுவல்களில் காணப்படும் எனும் கட்டாயமும் இல்லை. கருத்துகள் நேரடியாகவும் மறைநிலையிலும் அமைந்திருக்கலாம்.
5.  கேட்கப்படும் சில வினாக்களுக்கான பதில்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திகளிலும்      விரவி இருக்கலாம். ஆகவே, பனுவல்களைக் கவனமாக வாசித்து, உணர்ந்து, பகுப்பாய்வு செய்து பதில்களை வழங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம்.

புள்ளிகள் வழங்கும் விதம்
1.    இப்புதிய பாடத்தில் காணப்படும் கேள்வி குறிப்பிட்ட கருத்துகளை மதிப்பீடு செய்யத் தூண்டுகிறது. 
2.    ஒவ்வொரு கேள்வியின் இறுதியில் காணப்படும் அடைப்புக் குறிக்குள் வழங்கப்பட்டிருக்கும் புள்ளிகள், அந்தந்த வினாக்கள் எத்துணை விரிவான பதில்களை எதிர்பார்க்கின்றது என்பதனை உறுதிப்படுத்துகின்றது. ஒரு கருத்திற்கு ஒரு புள்ளி வீதம் என்பதனைக் கருத்தில் கொண்டு பதில்களை வழங்கினால் போதுமானது.
3.    மாணவர்கள் வழங்கும் பதில்கள் முழு வாக்கியமாகவோ வாக்கியங்களாகவோ அமைந்திருக்க வேண்டும்.
4.    மாணவர்கள் வழங்கும் பதில்களில் எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் அற்றவையாக அமைந்திருக்க வேண்டும்.

மாதிரிக் கேள்விகளும் பதில்களும்

A பிரிவு [30 புள்ளிகள்]

கீழ்வரும் உரைநடைப் பகுதியை வாசித்து, கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்குச் சொந்த நடையில் விடை எழுதுக.

மனித இனம் தோன்றிய காலந்தொட்டே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன எனலாம். இவை ஏட்டில் எழுதா வாய்மொழி இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்கள் மக்களது கவி புனையும் ஆற்றலை, கற்பனை வளத்தினை மட்டும் எடுத்துக்காட்டுவதுடன் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு பாடலையும் கூர்ந்து நோக்கின் மக்களின் உளவியல் தன்மை அதில் ஊடுருவி நிற்பதை அறியலாம். முனைவர் ஆறு. அழகப்பன் அவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள் – திறனாய்வுஎன்ற நூலில் நாட்டுப்புறப் பாடல்களை ஏழாக வகைப்படுத்தியுள்ளார். அவை குழந்தைப் பாடல்கள், பக்தி, தொழில், கொண்டாட்டம், உணர்ச்சி, ஒப்பாரி, பன்மலர்ப் பாடல்கள் ஆகியவை.

இவற்றுள் குழந்தைப் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று குழந்தைகள் பாடுவது; மற்றொன்று குழந்தைகளுக்காக மற்றவர்கள் பாடுவது. குழந்தை வளர்ச்சி நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாடல்களின் பாடுபொருள் மாறுபடுகின்றது. குழந்தை தவழும்போதும் உண்ணும்போதும் சாய்ந்தாடும்போதும் கைவீசும்போதும் விளையாடும்போதும் உற்றாரும் பெற்றோரும் குழந்தைகளுக்காகப் பாடல்களைப் பாடுகின்றனர். விளையாட்டுப் பருவத்தில் விளையாட்டுப் பாடல்களையும் கதைப் பாடல்களையும் குழந்தைகளும் பாடுகின்றனர்.

குழந்தைப் பருவம் மனித வளர்ச்சியில் மிகவும் இன்றியமையாத பருவமாகும். க்காலத்தே குழந்தையின் ஆழ்மனத்தில்பதியச்செய்யும் செய்திகள் பசுமரத்தாணிபோல் பதிந்து விடுகின்றன. குழந்தைப் பாடல்கள் இவ்வேலையினை எளிதாகச் செய்துவிடுகின்றன எனில் மிகையில்லை. தாலாட்டுப் பாடலும் குழந்தைப் பருவ விளையாட்டுப் பாடலும் குழந்தைக்கு மொழியைக் கற்பிப்பனவாக, நினைவாற்றலை மேம்படுத்துவனவாக, கற்பனை ஆற்றலை வளர்ப்பனவாகத் திகழ்கின்றன.

தாய்மை உணர்வின் வெளிப்பாடாக அமையும் தாலாட்டுப் பாடல்கள் தாயின் மனநிலைக்கேற்பவும் குழந்தை உறங்கும் காலநேரத்திற்கு ஏற்பவும் அமைகின்றன. தாலாட்டின் பாடற்பொருள் குழந்தைக்குத் தெரியுமா? அப்பாடல்கள் எவ்வாறு உளவியல் ரீதியாகக் குழந்தைகளை மாற்றும்? நாம் விழிப்பு நிலையில் பெறும் அனுபவங்களைவிட, உறக்க நிலையில் நம் ஆழ்மனத்தில் பதியும் செய்திகள் நம்மை வழி நடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள். கருவில் இருக்கும்போதே பிரகலாதன் நாரதர் பாடல்வழி பக்தனாக வளர்ந்தான்; அபிமன்யு பத்ம வியூகத்தை அறிந்து கொண்டான் போன்ற புராணக்கதைகள் இங்கு இணைத்து நோக்கத்தக்கன. மனிதன் காண்பன, கேட்பன அனைத்தும் அவன் விருப்பமின்றியே அவனுடைய மூளையில் பதிவாகி விடுகின்றன. இப்பதிவு உடற்கூற்றின் வெளிப்பாடாகும். இவை மனிதப் பண்பின் வேறுபாடுகளால் வரும் விளைவு என்பார் ராபர்ட் பிரிட்ஜ்ஸங்.

தாலாட்டுப் பாடல்கள் குழந்தைக்குத் தூண்டல் உணர்வையும் மொழி கற்கும் திறனையும் புலன்களின் வழியாக அறிவாற்றல் பெறும் தன்மையினையும் அளிக்கின்றன. தூண்டல் உணர்வு என்பது ஒன்றை முயற்சிசெய்து அடைய வேண்டும் எனும் உணர்வை அளிப்பது என்பர் உளவியலாளர்கள்.

                             வெள்ளியில் செய்த ஏட்டில்
                             வைர எழுத்தாணி கொண்டெழுத
                             பள்ளியில் சேர்க்க மாமன்
                             பரிவுடன் வந்திடுவார்

எனும் பாடல் குழந்தைக்குக் கல்வி கற்பதற்கான முனைப்பை அளிப்பதாக உள்ளது.

சீதை மகனோ எஞ்செல்வம்
                             சீராளன் பெத்த கண்ணோ
                             அல்லி மகனோ எஞ்செல்வம்
                             அர்ச்சுனனார் பெத்த கண்ணோ

எனும் பாடல் வரிகளின்வழி உயர்வான கற்பனையைத் தாய் தன் குழந்தை மனத்தில் ஊட்டுகின்றாள்.

தாய்க்கும் குழந்தைக்குமுள்ள பிணைப்பு, சமுதாயத்தில் குழந்தை முன்னேற ஒரு பாதுகாப்பு உணர்வினை அளிக்கிறது எனில் மிகையில்லை. இளமையில் தாயன்பு கிடைக்கப் பெறாத குழந்தை  இளங்குற்றவாளியாக உருவாக வாய்ப்பிருக்கிறது, எனும் கருத்து இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. எனவே, தாலாட்டுப் பாடல்கள் உளவியல் ரீதியாகச் சிறந்த இணைப்பை ஏற்படுத்தும் உறவுப் பாலங்களாகத் திகழ்கின்றன எனலாம். 

விளையாட்டுப் பாடல்கள் வழியாகக் குழந்தைக்குக் கல்வியினைத் தாய் புகட்டுகிறாள். மற்றும் வினாவிடை வடிவில் அமையும் பாடல்கள் நினைவாற்றலைத் தூண்டும் பாடல்களாகவும் இருப்பதைக் காணலாம். உயிரினங்கள் வாழ்க்கையில் ஆவலாகச் செய்யவேண்டிய வேலைகளுக்காகத் தங்களைத் தயார்செய்து கொள்வது விளையாட்டு மூலமாகும், என்பார் தாம்சன். ஆண் குழந்தைகள் பிற்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பளுவினை, பெண் குழந்தைகள் இல்லறத்தில் மேற்கொள்ள வேண்டிய கடமையினை முன்கூட்டியே குழந்தைகளின் மனத்தில் புகுத்துவதற்கும் இவ்விளையாட்டுப் பாடல்கள் வித்திடுகின்றன. மேலும் சில விளையாட்டுப் பாடல்கள் கூடி வாழவேண்டிய இயல்பினை ஊட்டுவதாகவும் உச்சரிப்புப் பயிற்சியினை அளிப்பதாகவும் பிஞ்சு நெஞ்சில் பக்தி உணர்வை ஏற்றுவதாகவும் அறிவுரை புகட்டுவதாகவும் முடிவெடுக்கும் திறனை வளர்ப்பதாகவும் அமைகின்றன.
 என் சோட்டுப் பிள்ளைகளா
                             இளவாழைத் தண்டுகளா
                             வாழைக் குருத்துகளா
                             விளையாட வரலையோ
எனும் பாடல் குழந்தைக்குக் கூடி விளையாடவேண்டும் என்ற பண்பினைப் புகுத்துகின்றது.

குழந்தைப் பாடல்கள் வெறும் பாடல்களாக மட்டுமின்றி, குழந்தையின் உள்ளத்தைச் செம்மைப்படுத்தும் பாடல்களாகவும் அமைகின்றன. குழந்தைப் பாடல்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விதமாக அமைகின்றன. இவை அனைத்தையும் திரட்டி ஆய்வதன் மூலம் அந்தந்த இன, சமூக மக்களின் கருத்துகள் உளவியல் ரீதியாகக் குழந்தையிடம் எப்படி எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள இயலும்.
(மூலம்: தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் சில மாற்றங்களுடன்)
(442 வார்த்தைகள்)

வினா-விடை

1.    நாட்டுப்புற இலக்கியங்கள் மக்களின் எத்தகைய  தன்மைகளைப் புலப்படுத்துகின்றன?                                                                  [3]
மனித இனம் தோன்றிய காலந்தொட்டே தோன்றிவிட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் மக்களது கவி புனையும் ஆற்றல், கற்பனை வளம், அவர்களது உளவியல் தன்மை ஆகியவற்றை நன்முறையில் புலப்படுத்துகின்றன.
[இக்கேள்விக்கான பதில் வாசிப்புப் பகுதியினுள்ளே அடங்கியுள்ளது. இக்கேள்வி மூன்று மதிப்பெண்களை வழங்கும் எனக் குறிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கேற்றாற்போல், கொடுக்கப்பட்ட பதில் ஒரே வாக்கியத்தில் மூன்று முக்கியக் கருத்துகள் அடையாளம் கண்டு வழங்கப்பட்டுள்ளன.]

2.    தாலாட்டுப் பாடல்கள் உளவியல் ரீதியாக குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் மூன்று மாற்றங்களைக் குறிப்பிடுக.                                                [3]
உளவியல் ரீதியாக குழந்தைகளின் மனதில் தூண்டல் உணர்வினையும் மொழியைக் கற்கும் திறனையும்  ஐம்புலன்களின் வழியாக அறிவாற்றல் பெறும் தன்மையினையும் தாலாட்டுப் பாடல்கள்  ஏற்படுத்தவல்லன.
[இக்கேள்விக்கான பதில் வாசிப்புப் பகுதியினுள்ளே அடங்கியுள்ளது. இக்கேள்வி மூன்று கூறுகள் யாவை என வினவி அதன் தேவையினை உறுதிபடுத்தியுள்ளது. எனவே, மாணவர்கள் முழுமையான மதிப்பெண்களைப் பெற அம்மூன்று முக்கியக் கருத்துகளையும் அடையாளம் காண வேண்டும்]

3.    விளையாட்டுப் பாடல்கள் குழந்தைகளின் பிற்கால வாழ்க்கைக்கு எவ்வாறு உதவுகின்றன?                                                      [6]

விளையாட்டுப் பாடல்கள் குழந்தைகளுக்குப் பல நன்மைகளை வழங்கவல்லன. இதன் வழியாக குழந்தைகளின் நினைவாற்றலை வளப்படுத்த முடியும். கூடி வேலை செய்வதன் அவசியத்தையும், எல்லாச்  சூழல்களிலும் சோம்பலின்றிக் கடமையாற்றும் திறனை வளர்க்கும் பண்பினையும் இதன் மூலம் வளர்க்கலாம். ஆண் குழந்தைகள் பிற்காலத்தில் மேற்கொள்ள வாழ்வியற் கடமைகளை மறைமுகமாகப் புகட்டவும், பெண் குழந்தைகள் இல்லறத்தில் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை முன்கூட்டியே அவர்களின் மனதில் பதிக்கவும் விளையாட்டுப் பாடல்கள் உதவுகின்றன. இதனோடு, குழந்தைகள் பிறரோடு எக்காலத்திலும் கூடி வாழவேண்டிய இயல்பினை ஊட்டி அவர்களது மனதினைச் செம்மைப்படுத்துவதாகவும் சில பாடல்கள் உதவும் வகையினில் அமைந்திருக்கின்றன.
[ஆறு மதிப்பெண்களை வழங்கும் இக்கேள்விக்கான பதில் வாசிப்புப் பகுதிக்குள்ளேயே காணப்படுகின்றது. எனவே, மாணவர்கள் முழுமையான மதிப்பெண்களைப் பெற அந்த ஆறு கருத்துகளையும் அடையாளம் கண்டு எழுத வேண்டும்]
 
4.    நாட்டுப்புறப் பாடல்கள் அழியாமல் காப்பதற்கான வழிமுறைகளை விளக்குக.     [8]
நாட்டுப்புறப் பாடல்கள் அழியாமல் பல வழிகளில் காக்கலாம். முதலாவதாக, இளங்குழந்தைகளுக்கு ஆங்கில (ரைம்ஸ்) நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக் கொடுப்பதை விடுத்து, தாய்மொழில் காணப்படும் நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, ஏட்டில் எழுதா வாய்மொழி இலக்கியங்களாக இருந்துவரும் நாட்டுப்புற இலக்கியங்களை எழுத்து வடிவங்களில் ஏற்றி அவற்றை நன்முறையில் பராமறித்தல் வேண்டும். மூன்றாவதாக, தற்காலத் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றாற்போல மின்னியல் சாதனங்கள் போன்ற தகுந்த ஊடகங்களில் வழி அவற்றைப் பிரபலப்படுத்தலாம். நான்காவதாக, நாட்டுப்புற இலக்கியங்களில் காணப்படும் சிறப்பியல்புகளை மக்களிடையே  பிரபலப்படுத்தி அவர்களின் கவனத்தை அதன் பக்கமாக ஈர்க்கலாம். ஐந்தாவதாக,  குழந்தைகளுக்கு இப்பாடல்களை நேரடியாக அறிமுகம் செய்யும் வண்ணத்தில் பாடத்திட்டங்களில்   இணைத்துப் போதிக்கலாம். இறுதியாக, இப்பாடல்களைப் பாடி மகிழும் அதே வேளையில் பள்ளி, வட்டாரம், மாநிலம், நாடு, அனைத்துலக ரீதியிலான மன்னம் செய்து ஒப்புவிக்கும் போட்டிகளை நடத்தலாம்.  இவ்வழிமுறைகள் நாட்டுப்புறப் பாடல்கள் நிலைத்து வாழ வழிசெய்யும்.

5.    இளமையில் தாயன்பு கிடைக்கப்பெறாத குழந்தை இளங்குற்றவாளியாக உருவாக வாய்ப்பிருக்கிறது’, எனும் கருத்தினை மதிப்பிடுக.                          [10]
[இவ்வகைக் கேள்வி இதுநாள் வரையிலும் கேட்கப்படாத கேள்வி வகையாகும். வழங்கப்பட்ட கூற்றின் மதிப்பினைத் தகுந்த கருத்து அல்லது சான்றுகளின் துணையோடு மதிப்பிட வேண்டியது மாணவர்களின் கடமையாகும். மாணவர்கள் தாம் பெற்ற அனுபவ அறிவின் ஆழ்நிலையினை முன்வைக்க வாய்ப்பு வழங்கும் கேள்வி வகையிது.

மாணவர்கள் மூன்று வகைகளில் பதில்களை வழங்கலாம்.
. வழங்கப்பட்ட கருத்திற்கு இணங்க தமது நிலைப்பாட்டினை உறுதிசெய்தல் 
. வழங்கப்பட்ட கருத்திற்கு இணங்கவும் மறுத்தும் தமது நிலைப்பாட்டினை உறுதிசெய்தல்
. வழங்கப்பட்ட கருத்தினை முற்றிலும் மறுத்து தமது நிலைப்பாட்டினை உறுதிசெய்தல் 

.      வழங்கப்பட்ட கருத்திற்கு இணங்க தமது நிலைப்பாட்டினை உறுதிசெய்தல் 

இளமையில் தாயன்பு கிடைக்கப்பெறாத குழந்தை இளங்குற்றவாளியாக உருவாக    வாய்ப்பிருக்கிறது’, எனும் கருத்து முற்றிலும் உண்மையே.  தாய்மையின் மறு உருவமே அன்பென்றால் அது மிகையாகாது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வெள்ளைத் தாளுக்குச் சமம் என உளவியல் அறிஞர்கள் கூறுவர். அத்துணைத் தூய்மை வாய்ந்த குழந்தைகளின் மனதில் ஏற்படும் வாழ்வியல் அனுபவங்கள் அவர்கள் வாழும் சூழல்களாலேயே உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் தவறுகள் செய்து, அதன் மூலம் பெறப்படும் பட்டறிவின் மூலமாகவே தமது அறிவுனையும் செயல்பாட்டினையும் உருவாக்கிக் கொள்கின்றன. இவ்வகையில் அவர்கள் செய்யும் தவறுகளையும் குறைகளையும் குற்றங்களாகப் பார்க்காமல், அன்போடு கணிந்து அவர்களைச் செம்மைப்படுத்தி நல்வழிப்படுத்தும் பெரும்பொறுப்பினைக் கொண்டவர் தாய் என்றால் மிகையல்லை. அவ்வாறு இளங்குழந்தைகளை அன்பினால் செம்மைப்படுத்தும் நல்லாசானாகச் செயல்படும் தாயன்பு கிடைக்கப் பெறாத குழந்தைகள் வழித்தடம் மாறி, தாம் செய்யும் அனைத்துச் செயல்களும் சரியானைவையே என மனதில் பதித்து, நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள இடைவெளியினை உணராமல் வளரும் வேளையில் இளங்குற்றவாளிகளாக உருவாக வாய்ப்பிருக்கின்றது. இதனையே, எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதன் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவரவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே எனும் கண்ணதாசனின் தத்துவ வரிகள் மெய்ப்பிக்கின்றன.

.      வழங்கப்பட்ட கருத்திற்கு இணங்கியும் மறுத்தும் தமது நிலைப்பாட்டினை             உறுதிசெய்தல் 

இளமையில் தாயன்பு கிடைக்கப்பெறாத குழந்தை இளங்குற்றவாளியாக உருவாக    வாய்ப்பிருக்கிறது’, எனும் கருத்தில் உண்மை புதைந்து கிடந்தாலும், இக்கருத்தினை முற்றிலும் உண்மையென ஏற்றுக்கொள்ள இயலாது. இளமையில் கல்வி சிலைமேற் எழுத்துஎன்பதற்கொப்ப இளம்வயதில் குழந்தைகளின் மனதில் விழும் அனுபவ விழுதுகள் வேரூன்றி வளர வாய்ப்புள்ளது. ஒரு தாயின் அரவணைப்பில் வளரும் குழந்தை ஒழுக்கச் சீலராக வளர வாய்ப்புகள் இருந்தாலும், தாயன்பு ஒன்று மட்டும் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்து விடுவதில்லை. பிறக்கும்போதே பெற்றோர்களை இழந்து பிறக்கும் குழந்தைகள் பலர் தாயன்பு கிடைக்கப்பெறாமல் வளர்ந்து வாழ்வில் சிறப்புப்பெற்றவர்களாகவும் உள்ளனர். இதற்கு அமெரிக்காவில் அடிமைத்தலையினை வேரறுத்த அமெரிக்க ஜனாதிபதியான ஆப்பிரகான் லிங்கன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எனவேதான், குழந்தைகள் வாழும் சூழலும் வளரும் சூழலும் அவர்களது மனவியல்புகளை உறுதிசெய்யும் பெரும்பங்கினை ஆற்றுகின்றன. அதிலும் ஒத்த வயதுடைய அவர்களது நண்பர்களது சகவாசம் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. நல்ல தாயன்பு கிடைத்தாலும், கூடா நட்பின் மூலமும் கூட குழந்தைகள் இளங்குற்றவாளிகளாக உருவாக வாய்ப்பிருக்கிறது, எனும் உண்மையினையும் நாம் மறுக்கவியலாது.

.       வழங்கப்பட்ட கருத்தினை முற்றிலும் மறுத்துத் தமது நிலைப்பாட்டினை                 உறுதிசெய்தல் 

இளமையில் தாயன்பு கிடைக்கப்பெறாத குழந்தை இளங்குற்றவாளியாக உருவாக    வாய்ப்பிருக்கிறது’, எனும் கருத்தினை எம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது.   தாயின் அரவணைப்பில் வளர்ந்து முழுமையான தாயன்பு கிடைக்கப்பெற்ற அனைத்துக் குழந்தைகளும் நல்லொழுக்கங்கள் மிகுந்த குழந்தைகளாக வளர்ந்துவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதுபோலவே, தாயின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் குற்றவாளிகளாக வளர வாய்ப்பிலை எனவும் கூற இயலாது. தாயன்பு குறுகிய வட்டத்திலிருந்து குழந்தைகளைக் கண்காணிக்கும் பங்களிப்பினையே செய்கின்றது. இந்நவீன காலத்தில் குழந்தைகள் தமது பெற்றோர்களிடமிருந்து கற்பதைவிட பிறரிடமிருந்தும் சுற்றுச் சூழலிருந்துமே தற்போது அதிகமாகவும் சுலபமாகவும் கற்றுக் கொள்கின்றனர் என்பதனை மறுக்க இயலாது. பள்ளிக்கூடங்களில் கற்கும் பாடங்கள், நண்பர்களிடமிருந்து பெறும் ஆலோசனைகள், தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படுத்தப்பட்ட உந்துதல் தேவைகள் ஆகியவைகூட இளங்குற்றவாளிகள் உருவாக வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றன. அதிலும், குடும்பச் சூழலைவிட மேற்கண்ட சூழல்களில் தங்களது நேரத்தை அதிகமாக செலவிடும் குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் அன்பினைவிட சுற்றுச்சூழலின் தேவைகளே அதிகமாக நிர்ணயிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுவிட்டது. எனவே, இளமையில் தாயன்பு கிடைக்கப்பெறாத குழந்தை, இளங்குற்றவாளியாக உருவாக வாய்ப்பிருக்கிறது எனும் கருத்தினை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது.

[பத்து மதிப்பெண்களை வழங்கும் இக்கேள்விக்கான பதில்கள் வாசிப்புப் பனுவலில் இல்லை. இவ்வகைக் கேள்விக்கும் மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப் பதில் எழுத வேண்டியுள்ளது. முன்னர்க் குறிப்பிட்டதுபோல, இவ்வகைப் பதில்களை எதிர்பார்க்கும் வினாக்களுக்கு அதிகப் புள்ளிகள் வழங்கப்படுவது வழக்கம். எனவே, பத்துப் புள்ளிகளைப் பெறுவதற்கு மாணவர்கள் குறைந்தப்பட்சம் 6 கருத்துகளைத் தகுந்த சான்றுகளோடு வழங்க வேண்டும். கருத்தாழமும் அனுபவ அறிவின் வெளிப்பாடும் தெரியும் வகையினில் பதில்களைப் பத்து வரிகளுக்கும் குறையாமல் எழுதினால் சிறந்த புள்ளிகளைப் பெறலாம்.] 

பொதுச் சிந்தனை
1.    Blooms Taxonomy (Andersons & Krathowl, 2001)
2.    LOT (Low Order Thinking)
3.    அறிதல் / Remembering
4.    உணர்தல் / Understanding
5.    HOT (High Order Thinking)
6.    பயன்படுத்துதல் /Applying
7.    பிரச்சனை களைவு / Analyzing     (கீழ்நிலை / Low Level)
8.    மதிப்பிடுதல் / Evaluating
9.  உருவாக்குதல் / Creating          (உயர்நிலை / HighLevel)

நன்றி ; 1) முனைவர் மோகனதாஸ் இராமசாமி, விரிவுரையாளர், மலாயாப் பல்கலைக்கழகம்.
       2) எஸ்திபிம் தமிழ்மொழிப் பாடத்திட்டம், மலாயாப் பல்கலைக்கழகம்.
       3) தமிழாசிரியர் திரு. ஆனந்தன் ஐயாவு, குலுவாங், ஜொகூர்.
 
ஆக்கம்: தமிழாசிரியர் .தமிழ்வாணன்
ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி, ஜொகூர்
05.12.2012

1 comment: